Monday 17 October 2011

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்...


"சார்... என்னை ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கக்கூட என்னோட பெற்றோர்களால முடியாத நிலை. கஷ்டப்பட்டு படிச்சேன். பத்தாம் வகுப்பு வர போயிட்டேன். படிப்ப நிறுத்திட்டு வேலைக்குப் போறதுதான் ஒரே வழின்னு தோணுச்சு. வீடு கட்டுற இடத்துல நைட் வாட்ச்மேன் வேலைக்குப் போனேன். ஒருநாளைக்கு 15 ரூபாய் சம்பளம். அதுல ரெண்டு வேள சாப்பிட முடியும். சில சமயங்கள்ல கட்டிடச் சொந்தக்காரர் சாப்பாடு கொண்டு வருவார். அது வரலைன்னா வேப்பிலையச் சாப்பிட்டு வயித்த நிரப்பிக்குவேன். இப்புடித்தான் ப்ளஸ் டு முடிச்சேன். அப்புறம் வேலைக்காக கோவை வந்தேன்.

அங்கதான் நம்ம மையத்துக்கு வர ஆரம்பிச்சேன். இப்ப சுகாதார ஆய்வாளர் பணிக்கான நேர்முகத்தேர்வக் கடந்து, பணிநியமன ஆணைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த வேலை கிடைத்ததற்கு மையம் முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது.." என்று மட, மடவென்று நிறுத்தாமல் பேசினார் வேலைகிடைத்த மகிழ்ச்சியில் இருந்த மூர்த்தி.

டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று ஏற்கெனவே வேலையில் அமர்ந்துள்ளவர்களின் பட்டியலில் இவரும் இடம் பெற்றுள்ளார். மையத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகரச் செய்யும் நிகழ்வு ஒன்றும் நடந்தது. நமது மையத்தில் தனது துவக்ககட்ட தயாரிப்பினை பத்து மாதங்களுக்கு மேற்கொண்ட ஜெகன், சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்கட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது வெற்றிச் செய்தியை பகிர்ந்து கொண்டபோது மையத்தின் பங்கையும் நினைவு கூர்ந்தார்.

கடந்த மூன்று மாத காலகட்டத்தில் மையத்திற்கு ஒரு புதுவகையான அங்கீகாரமும் கிடைத்தது. மத்திய உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் இயங்கும் ரெப்கோ வங்கி, தாயகம் திரும்பியோரின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் அதிகாரிகள் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான தேர்வுகள் நடந்தன. அந்தத் தேர்வில் பங்கேற்கும் தாயகம் திரும்பியோருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று திட்டமிட்ட வங்கி, அப்பணியை நமது பயிற்சி மையம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

கோவை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் நாம் அப்பணியைச் செய்தோம். தேர்வு முடிவுகள் வெளியாகியதில், நமது மையத்தால் நடத்தப்பட்ட பயிற்சிக்கு வந்தவர்களில் மூன்று பேர் தேர்வானார்கள். இந்த சூழலில்தான் 19 பொதுத்துறை வங்கிகள் இணைந்து எழுத்தர்களுக்கான தேர்வை நடத்தப்போகின்றன என்ற செய்திகள் வெளியாகின. புது மாதிரியான தேர்வு முறை என்பதால் இந்தச் செய்தியையே வேலையில்லா தலித் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வது என்று முடிவெடுத்தோம். மேலும் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் இல்லாமல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலைமையும் உருவானது.

நமது மையங்கள் இயங்கும் பகுதிகளில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ, அவற்றைச் செய்யலாம் என்று மையம் முடிவு செய்தது. அதையொட்டி, தனியாகவும், பல்வேறு அமைப்புகளுடன் சில இடங்களில் இணைந்தும் வங்கித்தேர்வுக்கான வழிகாட்டுதல் முகாம்கள் மற்றும் ஆன்லைன் பதிவுகள் போன்ற வேலைகள் நடந்தன. தற்போது, சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, நாமக்கல், சிவகங்கை ஆகிய இடங்களில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சென்னை போன்ற இடங்களில் ஸ்போக்கன் இங்கிலீஷ், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி போன்ற வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

நமது மையத்தின் ஆசிரியர்கள், வேலைவாய்ப்பு தேடி வந்திருப்பவர்கள் அன்றாடம் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அம்சங்களை முன்வைத்து வகுப்பைக் கொண்டு செல்கிறார்கள். அவர்களின் மொழியில் பயிற்சி நடக்கிறது. தன்னம்பிக்கை, திட்டமிடல், கடும் உழைப்பு மற்றும் பயிற்சி மையங்களுக்கான வருகை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று வலியுறுத்துகிறார்கள். வேலை தேடுபவர்கள் முன்னால் "மீண்டும் பள்ளிக்குப் போகலாம்..." என்ற அம்சம் வைக்கப்படுகிறது. போட்டித் தேர்வுத் தயாரிப்பில் அடித்தளம் அமைக்க ஆறு முதல் பத்தாம் வகுப்புப் பாடங்களைப் பயிலுதல் அவசியம் என்பதே அந்த அம்சத்தின் நோக்கமாகும்.

வருங்காலத்திட்டங்கள்

டிசம்பர் மாதத்தின் இறுதியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளுக்கான முயற்சிகளை மையம் செய்யவிருக்கிறது. கணிதப்பாடத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இந்தப்பணி மேற்கொள்ளும் திட்டமுள்ளது.


பயிற்சி வகுப்புகளுக்கான தொடர்பு எண்கள்

சென்னை - 7871157979(பாலாஜி)
மதுரை - 9443430782(கோவிந்தராஜன்)
கோவை - 9442080800(கஜேந்திரன்)
திருநெல்வேலி - 9486559316(பொன்னையா)
நாமக்கல் - 9443506890(கணேச பாண்டியன்)
விருதுநகர் - 9626447630(முத்துக்கூரி)
சிவகங்கை - 9500959431(பாரதிதாசன்)

*******
- கணேஷ்

No comments:

Post a Comment